தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர போலீஸார் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் எழில்நகர் சர்வீஸ் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 5 பேர் ஒரு ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது, சந்தேகமடைந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், ஆட்டோவில் ஏற்றிய மூட்டைகளை சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 1,000 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றைக் கடத்திய பாடி மணிகண்டன்(20), கொடுங்கையூர் தங்க பாண்டி(44), கொருக்குப்பேட்டை தங்க பாண்டியன்(57), தண்டையார்பேட்டை ராமர் களஞ்சியம்(71), சபாபதி (24) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும்,கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.