தமிழகத்திலேயே முதல் முறையாக ஆதிதிராவிட, பழங்குடி விவசாயிகளுக்கு 100% மானியத்தில்‌ மின் மோட்டாருடன்‌ நுண்ணீர்ப்‌ பாசன வசதி அமைத்துத்‌ தருவதற்காக ரூ.12 கோடி செலவிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் வேளாண் துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

‌”ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில்‌ ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள்‌ அமைத்து மின் மோட்டாருடன்‌ நுண்ணீர்ப்‌ பாசன வசதி அமைத்துத்‌ தருவதற்காக ரூ.12 கோடி செலவிடப்படும்‌.

அரியலூர்‌, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில்‌ உள்ள 200 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின்‌ நலனுக்காக, தமிழக வரலாற்றில்‌ முதன்‌முறையாக 2021-2022ஆம்‌ ஆண்டில்‌ நிலத்தடி நீர்‌ பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள்‌ அமைத்து, மின் வசதியுடன்‌, மின்மோட்டார்‌ பொருத்தி, நுண்ணீர்ப் பாசன வசதிகள்‌ 100 சதவீத மானியத்தில்‌ மேற்கொள்ளப்படும்‌. இதற்காக 12 கோடி ரூபாய்‌ நிதி செலவிடப்படும்‌.

வேளாண்‌ விளைபொருட்களைச் சேமித்து வைக்க விவசாயிகளுக்கு சேமிப்புக் கிடங்குகள்‌

அறுவடைக்குப் பின்‌ சேதமில்லாமல்‌ வேளாண்‌ விளைபொருட்களைச் சேமித்து, நல்ல விலை கிடைக்கும்‌போது சந்தைப்படுத்துவதில்‌ கிடங்குகள்‌ மிகவும்‌ முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, 2021- 2022ஆம்‌ ஆண்டில்‌, திருப்பூர்‌, புதுக்கோட்டை, நாமக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌ பூளவாடி, புதுக்கோட்டை மாவட்டம்‌ சிதம்பர விடுதி, நாமக்கல்‌ மாவட்டம்‌ எருமப்பட்டி, ஈரோடு மாவட்டம்‌ பர்கூர்‌ ஆகிய இடங்களில்‌ தலா 250 மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவுள்ள சேமிப்புக் கிடங்குகள்‌ ரூ.2 கோடி செலவில்‌ கட்டப்படும்‌”‌.

இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.