திமுக அரசால் மக்கள் ஏமாந்த நிலையில் உள்ளதால், எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம், ஒரே அணியாக பிரதான எதிர்க்கட்சியோடு சேர்ந்து, தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியது: தமாகா, 2019 முதல் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்று வருகிறது. தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும் இருக்கிறது. எனவே, வாக்காளர்கள் ஏமாந்த நிலையில் இருக்கின்றனர்.

அதனடிப்படையில், இந்த இடைத்தேர்தலில், திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால், எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம், ஒரே அணியாக பிரதான எதிர்க்கட்சியோடு சேர்ந்து, திமுகவுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அத்தகைய நிலை ஏற்படுமானால், மக்கள் நினைக்கின்ற மாற்றம், வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் உறுதியாக ஏற்படும் என்றார்.

‘அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாதது, இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?’ என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், ‘தேர்தல் ஆணையம், அனைத்து தேர்தலுக்கும் ஒரு கோட்பாடு, காலக்கெடு கொடுத்துள்ளது.

அதனடிப்படையில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, முறையாக தேர்தல் பணிகளைத் தொடங்கி மக்களின் எண்ணங்களை பிரதிபலித்து, வாக்குகளை முழுமையாகப் பெற்று, அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். அதற்கான அவகாசம் உள்ளது. இன்னும் வேட்புமனு தாக்கலே தொடங்கவில்லை’ என்றார்.