புதுடெல்லி: “இலவசங்கள் பிரச்சினை இல்லை. அவற்றை அரசாங்கம் எப்படிக் கொடுக்கும் என்பதுதான் பிரச்சினை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ இதழான பாஞ்சஜன்யாவின் வருடாந்திர கூட்டத்தில் தான் அமைச்சர் இவ்வாறான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன தனது உரையில், “அண்மைக்காலமாக இலவசங்கள் பற்றிய விவாதங்கள் நிறைய நடைபெறுகின்றன. எது இலவசம் என்று வரையறுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. எது இலவசம் என்பதல்ல பிரச்சினை. உண்மையான பிரச்சினை அந்த இலவசத்தை உங்களால் கொடுக்க முடியுமா முடியாதா என்பது தான் நிதர்சனமான பிரச்சினை. யாரேனும் ஒருவர் இலவசங்களுக்கான வாக்குறுதி அளித்தால் அதை எப்படி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பட்ஜெட்டில் தெரிவிக்க வேண்டும். நிறைய பேர் தேர்தல் நேரத்தில் இலவசங்களுக்கான வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். அப்புறம் ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில நிதிநிலையைப் பார்த்துவிட்டு அது சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்கின்றனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. நிறைய மாநில அரசுகள் இதுபோல் ஏதேனும் இலவசங்கள் வழங்குகின்றன. ஆனால் அவை எதுவும் மாநில பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டை காட்டுவதில்லை. மாறாக அந்த நிதிச்சுமையை மத்திய அரசு சுமக்குமாறு செய்துவிடுகின்றன. நீங்கள் இலவசங்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்துவிட்டு சுமைகளை மத்திய அரசை சுமக்க வைக்கலாமா? இலவச மின்சாரங்கள் வழங்கும் மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் பல உரிய நேரத்தில் சேவைக் கட்டணம் கிடைக்காமல் திணறுகின்றன” என்றார்.

காங்கிரஸ் கட்சியை சாடிய நிர்மலா சீதாராமன், “இந்தியப் பொருளாதாரத்திற்கு வங்கிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அதனால் வங்கிகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளார் பிரதமர் மோடி. ஆனால் இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசு வங்கியில் இருந்து அதாயம் பெற்றது. அந்த ஆதாயம் கட்சிக்கும், அவர்கள் உறவுகளுக்கும் சென்றது. ஆனால் மோடி அரசு அமைந்த பின்னர் பிரச்சினையை கண்டறிதல், பிரச்சினையை தீர்த்தல் வங்கிகளுக்கு முதலீட்டை அதிகரித்தல், வங்கிகளை சீர்திருத்துதல் என நான்கு நடவடிக்கைகள் மூலம் பொதுத் துறை வங்கிகளின் நலனை மேம்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.