நாட்டில் சுமார் 5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கவலை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பங்கேற்று உரையாற்றினர். அவர் பேசியதாவது, “இந்திய நீதித்துறையின் தரம் உலகம் அறிந்த ஒன்றாகும். இரு நாள்களுக்கு முன்னர் நான் லண்டன் சென்றிருந்த போது அந்நாட்டின் நீதித்துறையை சேர்ந்தவர்களிடம் உரையாற்றினேன். அவர்கள் இந்திய நீதித்துறையின் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ளனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை அவர்கள் தேவைக்காக மேற்கோள்காட்டிப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்திய நாட்டில் தீர்ப்புகள் வழங்குவதில் தான் தாமதம் ஏற்படுகிறது. நான் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற போது சுமார் நான்கு கோடி வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தன. தற்போது அது ஐந்து கோடியை தாண்டி விட்டது. இது பெரும் கவலை தரும் அம்சமாகும். இதை கவனித்து விரைவில் சீரமைக்காவிட்டால், நிலைமை மேலும் மோசமாகும். இந்த பிரச்சனைக்கு அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல. அனைத்து விதத்திலும் உதவி செய்ய அரசு தயாராகவுள்ளது.
பிரிட்டனில் ஒரு நீதிபதி தினசரி அதிகபட்சமாக நான்கு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குகிறார். ஆனால் இந்தியாவிலோ ஒரு நீதிபதி சராசரியாக 40 முதல் 50 வழக்குகளை கூடுதல் நேரம் செலவு செய்து கவனிக்க வேண்டியுள்ளது. நீதிபதிகளும் மனிதர்கள் தானே. சமூக வலைத்தள யுகத்தில் நீதிபதிகளை பலரும் தங்கள் பார்வைக்கு ஏற்ப விமர்சிக்கின்றனர். ஒரு விஷயத்தின் ஆழம் தெரியாமலேயே பலரும் தங்கள் விமர்சனங்களை கூறுகின்றனர்.” இவ்வாறு அவர் பேசினார்.