புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி வதேரா, மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் சார்ந்த கேள்விகளை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய இளைஞர்களில் 83% பேர் வேலைவாய்ப்பின்றி இருப்பது ஏன்? ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? நாட்டில் 30 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? ஒவ்வொரு தேர்வுக்கான வினாத்தாளும் கசிவது எப்படி?

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விவசாயிகள் மட்டும் கடனால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருப்பது எப்படி? விவசாயிகளின் வருவாய் எப்போது இரட்டிப்பாக்கப்படும்? குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் எப்போது பெறுவார்கள்?

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர், ஏழ்மை நிலையில் உள்ள உயர் சாதியினர் ஆகியோருக்கு அரசு பணிகள் மற்றும் நாட்டின் வளங்களில் உரிய பங்களிப்பு அளிக்கப்படாதது ஏன்?

பணவீக்கம் உச்சத்தில் இருப்பது எதனால்? குடும்பம் நடத்துவது கஷ்டமாக மாறிப்போனது எதனால்? சாமானிய மக்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கும் நிலை உருவானது எப்படி?

பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடக்கூடியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு எப்போது முடிவுக்கு வரும்?” என பிரியங்கா காந்தி வதேரா கேள்விகளை எழுப்பி உள்ளார்.