புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத் துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு இறுதி முதல் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சூழலில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 27-ம் தேதி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட் டத்துக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர் பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறோம். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். அமைதியான வழி யில் போராட்டம் நடத்துவோம். எங் களது போராட்டத்தால் அத்தியாவசிய பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

எனினும் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள், சந்தைகள், கடைகள், ஆலைகள், பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம். அரசு, தனியார் போக்குவரத்து சேவைகளையும் அனுமதிக்க மாட்டோம். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழுஅடைப்பு போராட்டம் நீடிக்கும்.

முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக வரும் 20-ம் தேதி மும்பையில் ஆலோசனை கூட்டம், வரும் 22-ம் தேதி உத்தராகண்டின் ரூர்க்கியிலும் விவசாயிகள் மகா பஞ்சாயத்தும் நடைபெறும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் முழுஅடைப்பு போராட்டத்தால் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

டெல்லியின் திக்ரி, சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு இடங்களிலும் வரும் 22-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கபடி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கபடி குழுக்கள் போட்டியில் பங்கேற்கும் என்றும் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என்றும் சம் யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.