சமூக நோக்கத்துடன் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். 427 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப் புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, “தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் நடைபெறுகிறது. இந்த திட்டத்துக்கு வித்திட்டது, தி.மலை மாவட்டம் என்பதில் பெருமையாக உள்ளது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் 5 கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில், முதல் கோப்பு எதுவென்றால், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கப்பட்டது தான். திருவண்ணாமலை மாவட்டத்தில் 17,989 மனுக்கள் பெறப்பட்டன. 5,552 மனுக்கள் மீது பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டு உதவிகள் வழங்கப் படுகின்றன.
சமூக நோக்கத்துடன் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கும் உதவ வேண்டும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை கேட்டுக்கொள் கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,92,824 பேர் உதவித் தொகை பெற்று வருகின்றனர். மேலும், 9,324 பேர் உதவித் தொகை கேட்டு மனு கொடுத்துள்ளனர். செய்யாறில் 40-க்கும்மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலை மட்டும், அரசு மருத்துவமனைகளுக்கு 160 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருகிறது.
சாலையோரத்தில் மரக்கன்றுகள்
பொது சேவைக்கு ஒதுக்கப்படும் நிதியின் (சிஎஸ்ஆர் நிதி) மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாலைகளின் இருபுறமும் மரக்கன்றை நட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். திருவண்ணாமலை மாவட் டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும்” என்றார்.