நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வலியுறுத்திஉள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் செப்டம்பர் 1-ல்(இன்று) 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இது தமிழக அரசின் துணிச்சலான முடிவு என்றாலும், அண்டை மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையும் மனதில் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பயிலும் கல்விக்கும், இணையவழி கல்விக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனவே பள்ளி, கல்லூரிகளை திறப்பது அவசியமாகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்கிறதா என்பதை அரசு முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.கரோனா 3-வது அலை பரவல்அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.