திருநங்கையர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கையர் திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளார்.தேசிய திருநங்கையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.  திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் முனைவர் ரியா, தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேத்ரினா, இயன் முறை மருத்துவர்கள் செல்வி சந்தோசம் மற்றும் மோனிகா ஆகியோர் சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருநங்கைகளுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். இதுதொடர்பான தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதள பதிவு: ‘இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த மறைந்த முதல்வர் கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் தமிழக அரசு, திருநங்கையர் – திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.