தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்தது. குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக தற்போது அருவிகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது.
தமிழ் புத்தாண்டு விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் குற்றாலத்தில் நீராடி சென்றனர். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் வரை வெயில் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலையில் இதமான காற்று வீசியது. மாலை 6 மணி வரை மழை இல்லை. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 3 பிரிவுகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் குறைவாக தண்ணீர் விழுகிறது.