மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் அதேநிலை எதிர்காலத்தில் தமிழகத்துக்கு ஏற்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் ஓமலூர், மேச்சேரி, ஜலகண்டாபுரம், மேட்டூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:

தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அதனால்தான் ஆளுநரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மனு அளித்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டால் உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் திமுகவுக்கு இல்லை.

திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் மக்களிடம் வாக்கு கேட்க நேரடியாக வரவில்லை. மக்களை சந்திக்கதெம்பு இன்றி, முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற திமுக-வினர் முயற்சி செய்கின்றனர். முறைகேடு இன்றி நேர்வழியில் திமுக வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை. மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் அதே நிலை எதிர்காலத்தில் தமிழகத்திலும் ஏற்படும். திமுக தேர்தல் அறிக்கையில் 70 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக, ஸ்டாலின் கூறுகிறார். அவரது மகன் உதயநிதி, 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்ட 8 பேர் இப்போது திமுக-வில் அமைச்சர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் வளமான துறை. திமுகவில் உழைத்தவர்களுக்கோ சாதாரண துறை. அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. நீட் தேர்வு தொடர்பாக நேரடி விவாதத்துக்கு தயார் என நானும், ஓபிஎஸ்-ம் அறிவித்துவிட்டோம். ஆனால், திமுகவில் இருந்து இதுவரை பதில் இல்லை. தமிழகத்தில் ரூ.35,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்தபோது சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக-வினர் முறைகேடு செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டதுடன், திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தது. திமுகவினர் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.