விராட் கோலி களத்தில் காட்டும் உற்சாகம், தீவிரம் ஆகியவற்றைப் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்தான் கோலிக்கு எல்லாமே என்று இருக்கிறது. எந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறார் எனத் தெரிகிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லார்ட்ஸில் நடந்த 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி வென்றதையடுத்து, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டிரண்ட்பிரிட்ஜ் டெஸ்ட்டிலும் இந்திய அணி வென்றிருக்க வேண்டியது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஒருவேளை கடைசி நாள் ஆட்டம் நடந்திருந்தால், டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்றிருக்கும்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, களத்தில் இறங்கிவிட்டாலே, வீரர்களை உற்காசப்படுத்துவது, விக்கெட் விழுந்தால் குதிப்பது, பாராட்டுவது என உற்சாகப்படுத்துவார். கோலியின் இந்தச் செயல்கள் களத்தில் மிகவும் அதீதமாகத் தெரிந்தாலும், செயற்கையாகப் பலருக்குத் தெரிந்தாலும், உண்மையில் கிரிக்கெட் மீதான நேசம், ஈர்ப்பு ஆகியவைதான் கோலியின் செயல்களுக்குக் காரணம்.
களத்தில் எதிரணி வீரர்களுடன் மோதல், ஸ்லெட்ஜிங், சேட்டைகள் போன்றவற்றைச் செய்யும் கோலி குறித்து பிரிட்டன் ஊடகங்கள் பலவாறு விமர்சித்து வரும்நிலையில் அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கோலியைப் பாராட்டியுள்ளார்.
பீட்டர்ஸன் தன்னுடைய பிளாக்கில் எழுதியிருப்பதாவது:
”விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முன்னோடிகளான, ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோரின் தடத்தைப் பின்பற்ற தன்னை உந்தித் தள்ளுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின், திராவிட் உள்ளிட்டோர் கோலியின் ஹீரோக்களாக உள்ளார்கள்.
டெஸ்ட்டில் ஜாம்பவானாகத் தான் உருமாறுவதற்கு, டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல டி20 போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது கோலிக்கும் தெரியும். அதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கோலி அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆழமான நேசிப்பு தேவைப்படும் இந்நேரத்தில், உலகளாவிய சூப்பர் ஸ்டாரான கோலியை இப்படி உற்சாகமான நிலையில் பார்ப்பது எவ்வளவு நல்லவிதமாக இருக்கிறது.
அனைத்துச் சூழல்களிலும் தன்னுடைய அணி செயல்படும் என கோலி மதிப்பிடுகிறார். ஆஸ்திரேலியா சென்று கடுமையான சூழலிலும் இந்திய அணி வென்றது. இங்கிலாந்து பயணம் வந்து லார்ட்ஸ் மைதானத்திலும் வெற்றி பெற்றது கோலியை மிகப்பெரிய அளவு திருப்திப்படுத்துகிறது.
கோலியின் உற்சாகம், போட்டியின் மீதான தீவிரம், அணி வீரர்களை அவர் நடத்தும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் எல்லாமே என நமக்குத் தெரியும். இதுபோன்ற தருணங்கள்தான் கோலியின் பாரம்பரியத்தை வரையறுக்கும்.
இங்கிலாந்துக்கு வந்து ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஓர் அணி சிறப்பாகச் செயல்படுவது என்பது கடினமானது. டிரண்ட் பிரிட்ஜில் மட்டும் கடைசி நாளில் மழை இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கும்.
முகமது சிராஜ் கடைசி நாளில் பந்துவீசியது அவரின் தீவிரம், வலிமை, பந்துவீச்சின் தரத்தை வெளிப்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உண்மையில் சிறப்பானதாக சிராஜின் பந்துவீச்சு இருந்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கு அனைத்து விதங்களிலும் இந்திய அணி தங்களைத் தகுதியாக்கியுள்ளது.
இதனால், இங்கிலாந்து அணி 3-வது டெஸ்ட் போட்டிக்கு ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து பேட்டிங்கில் மோசம் எனக்கூற முடியாது, ஆனால், கடைசி நாளில் அவர்கள் பேட் செய்தது ஒட்டுமொத்த மோசம்”.
இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்.