தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில் அனைத்து தரப்பு மக்களுக்கான, மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரை தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. காரணம், ஆளுநரின் உரையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்படுத்தப்பட்டவை, புதிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தது என்றாலும் கூட. அவை அனைத்தும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

குறிப்பாக முதலீடுகளை ஈர்ப்பதும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும், நிதி வருவாய் மீட்டெடுக்கப்படும், நீட் தேர்வுக்கு விலக்கு ஆகியவற்றை அறிவித்திருப்பது எவ்விதத்தில் முழுமை பெறும் என்பது கேள்விக்குறி தான். அதேபோல திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெரிய அளவில் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

கரோனா எதிர்ப்புக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுமே பயன் தந்தது. 10 ஆண்டுகளில் குடிசை இல்லா தமிழகம் என்பது வரவேற்கத்தக்கது. அதற்குண்டான செயல்பாடுகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் கவனம் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் உரை அமையவில்லை. மேலும் விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களுக்கான அறிவிப்புகள் போதுமானதல்ல.

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தலுக்கு முன்பு அறிவித்த தேர்தல் அறிக்கை சம்பந்தமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான அம்சங்களும் இடம்பெறவில்லை. எனவே 2022 புத்தாண்டின் தொடக்கத்தில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில் தமிழக மக்களுக்கான, மாநில வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை, ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.