உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த 31 வயதான மேக்னஸ் கார்ல்சன் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றார். இந்தத் தொடரின் 3-வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான ஹான்ஸ் நீமன், கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பிறகு சின்க்ஃபீல்ட் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் கார்ல்சன்.

சமீபத்தில் நடைபெற்ற ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் சாம்பியன் பட்டம்வென்றார். இந்த தொடரில் கார்ல்சனும் நீமனும் நேருக்கு மோதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரே ஒரு நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்திலிருந்து விலகினார் கார்ல்சன். இதனால் ஹான்ஸ் நீமன், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹான்ஸ்நீமன் விவகாரம் தொடர்பாக முதல்முறையாக வெளிப்படையான அறிக்கையை வெளியிட்டுள்ளார் கார்ல்சன். அதில் அவர் கூறியதாவது:

வெளிப்படையாகத் தெரிவித்ததை விடவும் ஹான்ஸ் நீமன் அதிக அளவில், சமீபகாலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். சின்க்ஃபீல்ட் கோப்பைப் போட்டியில் எனக்கு எதிராக விளையாடியபோது அவரது முன்னேற்றம் அசாதாரணமாக இருந்தது. அவரிடம் பதற்றம் வெளிப்படவில்லை, முக்கியமான தருணங்களிலும் ஆட்டத்தில் அவருடைய முழு கவனமும் இல்லை என்றே எனக்குத் தோன்றியது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஒரு சிலரே எனக்கு எதிராக அபாரமாக செயல்பட்டுள்ளனர். நீமனுக்கு எதிரான ஆட்டம் என்னுடைய எண்ணத்தை மாற்றியது.

செஸ் விளையாட்டில் ஏமாற்றுவது மிகப்பெரிய விஷயம். இதுசெஸ் விளையாட்டுக்கும், செஸ்போட்டியை நடத்தும் அமைப்பாளர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றே கருதுகிறேன். நாம் விரும்பும் விளையாட்டின் மீது அக்கறை கொண்ட அனைவரும் செஸ் விளையாட்டு மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏமாற்றுவதை கண்டறியும் முறைகளை அதிகரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மோசடியில் ஈடுபடுபவர்களை நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த வகையில் என்னுடையமுயற்சியாக கடந்த காலங்களில்மீண்டும் மீண்டும் ஏமாற்றியவர்களுடன் விளையாட நான் விரும்பவில்லை. இன்னும் என்னால் கூறமுடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நேரத்தில் நீமனிடமிருந்து அனுமதி பெறாமல் பேச முடியாது என்ற வரம்புக்குள் உள்ளேன். இனிமேல் என்னால் நீமனுக்கு எதிராக விளையாட முடியாது என்பதை என்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவாகத் தெரிவித்துள்ளேன். எதுவாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.