மிர்பூர்: வங்கதேச அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் நடந்துகொண்ட விதம் ஏமாற்றமடையச் செய்ததாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கதேச அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ‘டை’யில் முடித்தது. இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. பொதுவாக, ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது வழக்கம். ஆனால், போட்டியை நடத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி ‘டை’யில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததால், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.
வெற்றிக்கான முக்கியப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூ-க்கு எதிராக ஹர்மன்பிரீத் அதிருப்தியை வெளிப்படுத்தினார். களத்தில் பேட்டை கொண்டு ஸ்டெம்புகளை தாக்கியதுடன், கோப்பையை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வில் வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானாவிடம் ‘நடுவர்கள் இல்லாமல் நீங்கள் நீங்கள் இந்தப் போட்டியை சமன் செய்திருக்க முடியாது; அவர்களும் புகைப்படத்தில் இடம்பெறட்டும்’ என்று கூறியதும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
இந்த நிலையில், ஹர்மன்பிரீத் செயல் தங்களை ஏமாற்றமடையச் செய்துள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஹர்மன்பிரீத் செயலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லாலும் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஹர்மன்பிரீத் நடந்து கொண்டது பைத்தியகாரத்தனமானது. அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.