இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 30 ஆம் தேதியான இன்று வட உள் தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், மார்ச் 30 ஆம் தேதி இன்று முதல் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரை அதாவது மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.