மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் விஸ்தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், தரையிறங்கியபோது விதிகளை மீறியதாக அந்நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது
இதுகுறித்து டிஜிசிஏ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லியில் இருந்து இந்தூர் விமான நிலையத்துக்கு சென்ற விமானம் தரையிறங்கியபோது விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது கேப்டன் இல்லாமல் துணை பைலட் விமானத்தை தரையிறக்கியது தெரியவந்தது. இதன்மூலம், விஸ்தாரா நிறுவனம் பயணிகளின் உயிரை பணயம் வைத்துள்ளது.இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
விஸ்தாரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மிகவும் அனுபவம் வாய்ந்த கேப்டனின் மேற்பார்வையில்தான் டெல்லியில் இருந்து டேக் ஆஃப் செய்யப்பட்டு, இந்தூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. பைலட்டுகளுக்கு அனுபவம் இருப்பதற்கான சான்றிதழும் உள்ளது. மீண்டும் இதேபோன்று விமானத்தைத் தரையிறக்கி சோதிக்குமாறு இயக்குநரகத்திடம் கோரினோம். எனினும், அவ்வாறு நடத்தப்படவில்லை. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு விஸ்தாரா நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.