உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் புதிய கோரிக்கை ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான அரசாணையை திமுக அரசு வெளியிட்டிருந்தது.
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வன்னியர்களின் சமூக பின் தங்கிய நிலையை நிரூபிக்கும் விதமான தரவுகள் இல்லை என்று கூறி, அவர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். போராட்டங்கள் ஏதும் நான் அறிவிக்கப் போவதில்லை. என்று கூறியுள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பாமக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு என்ன மாதிரியான பதிலை அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.