பருவநிலைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் அதிக ஊட்டச்சத்துள்ள விதைகள் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி அப்போது இதனை கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை தேசத்திற்கு அர்ப்பணித்தார். ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார். காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்கினார். அத்துடன் புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே அவர் கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது:
கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில், விவசாயம் தொடர்பான சவால்களைத் தீர்க்க முன்னுரிமை அடிப்படையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மாறிவரும் பருவநிலைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் அதிக ஊட்டச்சத்துள்ள விதைகள் மீது கவனம் குவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், கடந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த மிகப்பெரிய வெட்டுக்கிளித் தாக்குதல் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், அதனைத் தடுக்கவும் நிறைய முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது, விவசாயிகளை அதிக சேதத்தில் இது இருந்து காப்பாற்றியது.
விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாதுகாப்பு வளையம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களின் வளர்ச்சி விரைவானதாக மாறும். மேலும், நிலத்தின் பாதுகாப்பிற்காக 11 கோடி மண் வள அளவீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நீர்ப் பாதுகாப்பை வழங்குவதற்காக நிலுவையில் உள்ள சுமார் 100 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான பிரச்சாரங்கள், பயிர்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு புதிய விதைகளை வழங்குவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்வது போன்ற விவசாயிகளுக்கு பலனளிக்ககூடியது.
குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிப்பதோடு, கொள்முதல் செயல்முறையும் மேம்படுத்தப்பட்டது. இதனால் அதிகமான விவசாயிகள் பலன் பெற முடியும். குறுவை சாகுபடிப் பருவத்தில் 430 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 85ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுநோய் காலத்தின் போது கோதுமைக் கொள்முதல் மையங்கள் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டது.
விவசாயிகளை தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், வங்கிகளிடமிருந்து உதவி பெறுவதை எளிதாக்கியுள்ளோம். விவசாயிகள் இன்று வானிலைத் தகவலை சிறந்த முறையில் பெறுகின்றனர். சமீபத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம், புதிய வகைப் பூச்சிகள், புதிய நோய்கள், தொற்றுநோய்கள் உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக மனிதர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கால்நடைகள் மற்றும் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயங்களில் தீவிரமான தொடர்ச்சியான ஆராய்ச்சி அவசியம். அறிவியலும், அரசும், சமூகமும் இணைந்து செயல்படும் போது முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்றும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் இத்தகைய கூட்டணி புதிய சவால்களை எதிர்கொள்வதில் நாட்டை வலுப்படுத்தும்.
பயிர் அடிப்படையிலான வருமான அமைப்பிலிருந்து விவசாயியை வெளியே கொண்டு வந்து மதிப்புக் கூட்டல் மற்றும் பிற விவசாயப் பணிகளுக்கு அவர்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் தீர்வுகளுடன் சத்தான தானியங்கள், சிறுதானியங்களை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியம் உள்ளது.
உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றை வளர்க்கலாம் என்பதே இதன் நோக்கம். வரும் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து ஐநா வழங்கிய வாய்ப்புகளை பயன்படுத்த மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
நமது பழங்கால விவசாய மரபுகளைக் கைவிடாமல், அதே நேரம் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதும் சம அளவில் மிகவும் முக்கியம். நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய விவசாயக் கருவிகள் எதிர்கால விவசாயத்தின் மையப் புள்ளியாக உள்ளன. மேலும் நவீன விவசாய இயந்திரங்களையும், உபகரணங்களையும் ஊக்குவிக்கும் முயற்சிகள் தான் இன்று நல்ல முடிவுகளைக் காட்டுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.