தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான வழக்கு அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக தெரிவதாக குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தற்போது தெலுங்கானா ஆளுனராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், 2017 ஆம் ஆண்டில்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழிசை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனையும் வழக்கையும் ரத்து செய்யக்கோரி தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு பலமுறை விசாரணைக்கு வந்தபோதும், தமிழிசை சௌந்ததராஜன் தரப்பிலும், தாடி கார்த்திகேயன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசியல் சாசனம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வழங்கினாலும், அதற்கான கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக தெரிவதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தோ அல்லது அதன் தலைவர் தொல். திருமாவளவனிடமிருந்தோ எந்த அங்கீகாரமும் வழங்கப்படாத நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கை ஏற்க முடியாது என கூறி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தொடரபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.