அரசுப் பேருந்தில் நான் ஓசில வரமாட்டேன் என்று கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு அடம்பிடிக்கும் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வது பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்களைப் பார்த்து, “நீங்க எங்க போனாலும் ஓசி பஸ்லதானே போறீங்க?” என்று கேட்டார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை ஓசி என்று அமைச்சர் பேசியது பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில் , கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் மூதாட்டி ஒருவர், “நான் ஓசியில் அரசு பஸ்ஸில் வரமாட்டேன். எனக்கு டிக்கெட் கொடுங்கள்” என்று அரசு பஸ் கண்டக்டரிடம் கேட்கிறார். அவர், “டிக்கெட் தர முடியாது” என்று கூறுகிறார். அடம் பிடிக்கும் அந்த மூதாட்டி, “எனக்கு டிக்கெட் தரவேண்டும். நான் ஓசியில் பஸ்ஸில் செல்லமாட்டேன்” என்று கூறி அடம் பிடிக்கிறார். வேறு வழி இன்றி கண்டக்டர், அந்த மூதாட்டிக்கு டிக்கெட் கொடுக்கிறார். அதன் பின்னர் மூதாட்டி இருக்கையில் உட்கார்ந்து பயணத்தை மேற்கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் மூதாட்டி துளசியம்மாள் உள்ளிட்ட 4 பேர் மீது கோவை மதுக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓசி” டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.