தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம் மற்றும் மகிஷா சூரசம்ஹாரத்தில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பக்தர்களுக்கு  அனுமதியில்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான  ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட  கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, வரும் அக்.6ம் தேதி  முதல் 16ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. சிறப்பு பெற்ற இத்திருவிழாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  பங்கேற்பது வாடிக்கையாகும். ஆனால், இந்த வருடம் கொரோனா நோய் தொற்று பரவல்  காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமலில் இருந்து  வருகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது. இந்நாட்களில் பக்தர்களின்  தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின்  வழிகாட்டுதல்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எப்படி வந்து செல்ல வேண்டும்.  அவர்களை எவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். உரிய சமூக இடைவெளியை  பின்பற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அரசின்  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில்,  வரும் 6ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றம் மற்றும் 15ம் தேதி மகிஷா சூரசம்ஹார  நிகழ்ச்சி ஆகியவை கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும். இதில் பக்தர்கள்  கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதுபோன்று, திருவிழா முடியும் நாளான 16ம் தேதி  நடைபெறும் வழிபாட்டிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொடியேற்றத்தை  தொடர்ந்து 7, 11, 12, 13, 14ம் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை  பக்தர்கள் கோயிலுக்கு வரவும், வழிபடவும் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன்  மூலம் பதிவு செய்த பக்தர்கள் மற்றும் நேரடியாக வரும் பக்தர்கள் சமூக  இடைவெளியை பின்பற்றி கோயிலின் உள்ளே சென்று வழிபட அனுமதிக்கப்படுவர். கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்குவது, கடைகள் அமைப்பது  போன்றவற்றுக்கும், கடற்கரை பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி  இல்லை. பக்தர்கள் கோயில் வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  கோயில் பகுதிகளில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

வழக்கமாக  தசரா திருவிழாவின் போது கிராம பகுதிகளிலுள்ள தசரா குழுக்களுக்கு  கொடியேற்றத்திற்கு பிறகு ஒவ்வொரு குழு சார்பாக நிர்வாகிகள் காப்பு எடுத்து  செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில்  ஒரு குழுவுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் தங்கள் குழுவுக்கான காப்பு  கயிறுகளை கோயில் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்றுக்கொள்ள  வேண்டும். பதிவு செய்யாத தசரா குழுக்கள் இருந்தால், அவர்கள் கோயில்  நிர்வாகத்தை உடனடியாக அணுகி வரும் 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.  மேலும் கோயில் நிர்வாகத்தின் மூலம் புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் அடையாள  அட்டை வழங்கப்பட்டு காப்புகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா  நாட்களில் பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கு வருகை  தருவதற்கு அனுமதி இல்லை. எனவே, பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு  அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். கொரோனா நோய்  தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள அனைத்து  நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள், பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,  என்றார்.கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், தசரா குழுவினர், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

1500 போலீசார் பாதுகாப்பு
தூத்துக்குடி  மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வந்து செல்லும் பொதுமக்கள்,  பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பிடங்கள், பாதுகாப்பு  வசதிகள், மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளிட்ட அனைத்து  அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். திருவிழாவை முன்னிட்டு  சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அரசு  எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு  அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

2 COMMENTS

  1. Wonderful blog! I found it while surfing around on Yahoo News.Do you have any tips on how to get listed in YahooNews? I’ve been trying for a while but I never seem to get there!Cheers minecraft

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here