கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய ஆறு சிற்றார் அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மேலும், திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆற்று வெள்ளம் அதிகரித்ததாலும், மழை நிற்காததாலும் சுமார் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அருமநல்லூர், சுசீந்திரம், தேரூர், காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், தோவாளை பெரியகுளம் நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பாதிப்பையும், குளத்தின் கரை சீரமைப்பு பணியையும் ஆய்வு செய்தார். பின்னர் ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணசாமி கோயில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பாய், படுக்கை விரிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து. திருப்பதி சாரம், குமாரகோயில் பகுதிகளில் குளங்களில் ஏற்பட்ட பாதிப்பையும் முதல்வர் பார்வையிட்டார். மேலும், முதல்வர் ஸ்டாலினுடன் முதல்வருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.