தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள 0.25 சதவீத வட்டி உயர்வு, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. ஏற்கெனவே, கடந்த ஆண்டுசெப்.10-ம் தேதி தமிழக மின்வாரியத்தால் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தற்போது வரை 6 முறை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, அவர்கள் சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் கடன் வழங்கப்படுகிறது. அந்த தருணத்தில் கடன் பெறுவோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தை எந்த சூழ்நிலையிலும் உயர்த்தக் கூடாது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடனை முழுமையாக திருப்பி செலுத்தும்வரை கூடுதலாக வட்டி வசூலிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கக் கூடாது என டான்ஸ்டியா சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.