இரண்டாம் கட்டமாக, வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, அடுத்த மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வுசெய்கிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை, அடுத்த மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் தென்சென்னை பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளை கடந்த 25ஆம் தேதி ஆய்வுசெய்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, வடசென்னை பகுதியில் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்கிறார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர், புழல் உபரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் ஆய்வுசெய்ய உள்ளார்.

இந்நிலையில், சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளையும், நாளை மறுதினமும் பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, சேலத்துக்கு நாளை செல்லும் முதலமைச்சர், வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார்.