எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் நடந்த தனது பிறந்தாள் விழா கொண்டாட்டத்துக்குப் பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க, ரவுடிகளை அரசு கைது செய்து வருகிறது. இதற்கு திருமாவளவன், வன்னி அரசு போன்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா? போலீஸார் சாதி பார்த்து ரவுடிகளை கைது செய்யவில்லை.

வார்த்தையின் அர்த்தம் புரியாமல்…

செய்தியாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தையை மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தி உள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் இருக்கிறது.

உள்நோக்கத்தோடு ஒரு சிலர் ஆளுநர் பதவியை பற்றி அநாகரிகமாக பேசுவதை அனுமதிக்க முடியாது. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிகப்பெரிய சமூகப் பின்னணி கொண்டவர்.நேர்மையானவர். அவரையும்இப்படித்தான் கொச்சைப்படுத்தினர். தமிழகத்தில் உடனடியாக அனைத்து நாட்களிலும் வழிபடகோயில்களை திறந்துவிட வேண்டும்.

இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.