குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சிறுமியிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த போது, இருவரும் வேண்டும் என்று தெரிவித்தார்

தத்துக் கொடுக்கப்பட்ட சிறுமியை மீண்டும் கேட்டு, பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்புத் தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்தியா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், தனது மூன்றரை மாத பெண் குழந்தையை, சிவக்குமார் கடந்த 2012ம் ஆண்டு தத்து கொடுத்தார். இதற்கிடையில் சத்யாவின் கணவர் ரமேஷ் புற்று நோயால் கடந்த 2019ம் ஆண்டு இறந்த நிலையில், தத்து கொடுத்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று பெற்ற தாய் சரண்யா, அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த பிரச்னை காரணமாக சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு, சிறுமியிடம் விசாரித்த போது, இருவரும் வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வளர்ப்பு தாயிடமே குழந்தை வளர்ந்து தற்போது சிறுமி ஆகிவிட்டதால் வளர்ப்புத்தாய் வளர்க்க வேண்டும் என்று கூறி, சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பெற்ற தாயை வாரம் ஒருமுறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்