கோவையில் யானைகள் உயிரிழந்த விவகாரத்தில் ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கோவையில் மூன்று  யானைகள் இறந்தது எப்படி என்பது  குறித்து ரயில் ஓட்டுனர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்டம் நவக்கரையை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9.05 மணி அளவில் சுமார் 25  வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையும் 12 முதல் 15 வயது மதிக்கதக்க இரு பெண் யானைகள் என மூன்று பெண் யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, அந்த தண்டாவளத்தின் வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் 3 பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன

கோவையில்  3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ வாளையார் மதுக்கரை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 யானைகள் அடிபட்டுள்ளன. இரண்டு யானைகள் 30 மீட்டர் தூரத்திலும், 140 மீட்டர் தூரம்  தள்ளி பெண் யானையும் இறந்து இருக்கின்றது. இரண்டு ரயில் பாதைகளில்  “ஏ” பாதையில்  ரயில் போக்குவரத்து எப்போதும்  குறைவாக இருக்கும். இந்தப் பாதையில் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெற்றுள்ளது.

வனத்துறை -ரயில்வே துறை உடன்பாட்டின் படி ரயில் இயக்கப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகின்றது. 25 வயது மதிக்கதக்க பெண் யானை,15 வயது மதிக்கதக்க  மக்னா யானை, 16 வயது யானை ஒன்றும் உயிரிழந்துள்ளது.3 யானைகளின் உடல்களும் அருகில் இருக்கும் வனப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்ய இருக்கின்றனர்.

ரயில் சரியான வேகத்தில் சென்றதா என்பது குறித்தும், எப்படி யானை இறந்தது என்பது குறித்தும் ரயில் ஓட்டுனர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. விசாரணைக்கு பின்னர் நிச்சயம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில்தான் அதிகப்படியான  விபத்துகள் நடக்கின்றது. ஏற்கனவே “பி ” ரயில் பாதையில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. எனத் தெரிவித்தார்.