தன்னுடைய அண்ணன் அழகிரி, மகன் உதயநிதி படித்த கல்லூரியில் தானும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (லிபா)அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டிடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர், கலைஞருக்கும் லயோலாவுக்கும் பெரிய தொடர்பு உள்ளது . எனது அண்ணன் அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், என் மகன் உதயநிதி லயோலா கல்லூரியில் தான் படித்தனர். ஆதலால், எனக்கு இங்கு படிக்கவில்லையே என ஏக்கமாக இருக்கிறது. என் வாழ்வில் மறக்க முடியாத கல்லூரி லயோலா.. சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்வாகும்போது இங்குதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
பழம்பெருமை மாறாமல் கல்லூரியை பாதுகாப்பதற்கு எனது வாழ்த்துக்கள். 95 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கல்லூரியின் நூற்றாண்டு விழாவிலும் நான் பங்கேற்பேன் என நம்பிக்கை இருக்கிறது. இங்கு படித்தோர் உலகின் பல பகுதியிலும் அறிவு, தொழில் துறையில் சிறந்து விளங்குகின்றனர்.
ஏழை, பட்டியல் சமூக மாணவர்களுக்கு இக்கல்லூரி உதவி வருகிறது. இது வெறும் கட்டிடமல்ல, ஏழை, எளிய சிறுபான்மை மக்களின் கலங்கரை விளக்கம்.
கல்லூரிகள் மூலமே திமுக வளர்ந்தது. எனவே தான் திமுக ஆட்சி அமைந்தால் அதிக கல்லூரி திறக்கிறோம். காமராசர் காலத்தில் பள்ளிகள் அதிகமாகவும், திமுக ஆட்சியில் கல்லூரிகள் அதிகமாகவும் திறக்கப்பட்டது. கல்லூரிகள் வேலையாட்களை மட்டுமல்லாமல் சமூக சிந்தனை கொண்ட தலைவர்களையும் உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். முதல்வர்களில் முதலாவது இடத்தில் இருப்பதை விட மாநில வரிசையில் தமிழகம் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, மாணவ – மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.