மன்னார் வளைகுடாவில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கி தும்பிக்கை மீன்கள் அழிந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் அருகே கடல் பகுதியில் 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவிலான சிங்கில் தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, மனோலி புட்டி தீவு, முயல் தீவு, முள்ளி தீவு, வாழை தீவு, தலையாரி தீவு, பூவரசன்பட்டி தீவு, அப்பா தீவு உட்பட 21 தீவுகள் அமைந்துள்ளன.

இந்த தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகள் , கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாக இந்தியக் கடல் பகுதியிலேயே மிக அதிக அளவில் 4,223 கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்குதான் உள்ளன. இந்த கடல் பகுதியில் வசிக்கும் தும்பிக்கை மீன்கள் விசைப்படகு மீனவர்களின் வலையில் சிக்கி அழிந்து வருகின்றன.

இது குறித்து ராமேசுவரம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் சார் ஆராய்ச்சி யாளர் ஒருவர் கூறியதாவது:

மன்னார் வளைகுடா கடல் பகுதிகிகளில் உள்ள அரிய மீன் இனங்களில் ஒன்றுக்கு யானையின் தும்பிக்கை போல் மூக்கு காணப்படுகிறது. இந்த மீனின் உயிரியல் பெயர் Rhinochimaeridae. ஆங்கிலத்தில் எலிபென்ட் நோஸ் பிஷ் என்று அழைக்கப்படும் இந்த மீனை தும்பிக்கை மீன் என்று மீனவர்கள் அழைக்கின்றனர்.

இந்த மீன்கள் 60 செ.மீ. முதல் 140 செ.மீ. நீளம் வரை வளரக் கூடியவை. மீனின் மூக்கு போன்ற பகுதி வாயிலிருந்து உணர்தலுக்காக ஏற்பட்ட புடைப்பு ஆகும்.

இந்த தும்பிக்கை போன்ற அமைப்பை சுய பாதுகாப்பு, தகவல் தொடர்பு, நுகர்தல் போன்றவற்றிற்காக இந்த மீன்கள் பயன்படுத்துகின்றன. மேலும் கண் பார்வை சக்தி குறைவாக கொண்ட இந்த மீன்கள் அதன் தும்பிக்கையை கொண்டு கடலின் இருண்ட பகுதியை எளிதாக கடந்து விடும்.

கடலில் 200 மீட்டர் முதல் 2,000 மீட்டர் வரை ஆழமான இடத்தில் வாழும் இந்த மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்களின் வலைகளில் அடிக்கடி சிக்கிவிடுகின்றன. இவை உணவுக்காக பயன் படுத்தப்படுவதில்லை.

இதனால் கரைக்கு வந்ததும் வலையில் சிக்கிய தும்பிக்கை மீன்களை மீனவர்கள் தூக்கி எறிந்து விடுகின்றனர். இதனால் இந்த மீன்கள் அதிக அளவில் அழிந்து வருகின்றன. எனவே, வலைகளில் தும்பிக்கை மீன்கள் சிக்கினால் உடனே கடலிலேயே விட்டு விடுமாறு மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.