டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல் தொகுதி பணிகளுக்கு தகுதியான பலர் தேர்வில் பங்கேற்கத் துடிக்கும் போது, வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமற்றதாகும்.

தமிழக அரசுத் துறைகளுக்கு துணை ஆட்சியர் 18 பேர், காவல் துணை கண்காணிப்பாளர் 26 பேர், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 பேர், கூட்டுறவு துணைப் பதிவாளர் 13 பேர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் 7 பேர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி மூவர் என மொத்தம் 6 வகையான பணிகளுக்கு 92 பேர் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கி விட்ட நிலையில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

முதல் தொகுதி தேர்வுகளை எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மட்டும் 39 வயது வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், முதல் தொகுதி தேர்வுகள் அதிக அளவில் நடத்தப்படுவதில்லை என்பதால், அனைத்துத் தரப்பினருக்கும் போதிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வயது வரம்பு போதுமானது அல்ல.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒருமுறை குடிமைப்பணி தேர்வுகளை நடத்துகிறது. அதனால், அந்த அமைப்பு நிர்ணயித்துள்ள வயது வரம்புக்கு உட்பட்ட தேர்வர்கள் அதிக முறை தேர்வுகளை எழுத முடியும். ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிகளில் முதல் தொகுதி தேர்வுகளை நடத்துவதில்லை. சில நேரங்களில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் தேர்வே நடத்தப்படாமல் இருந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 17 முறை முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்காலத்தில் 8 முறை மட்டும் தான் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சரியான கால இடைவெளியில் தேர்வுகளை நடத்தாத தேர்வாணையத்திற்கு, வயது வரம்பை மட்டும் குறைவாக நிர்ணயிக்க உரிமை கிடையாது.

முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக அரசும் அதையேற்று 2018-ஆம் ஆண்டில் 2 ஆண்டுகளும், 2021-ஆம் ஆண்டில் இரு ஆண்டுகளும் வயது வரம்பை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட வயது வரம்புக்கும், தேர்வர்கள் கோரும் வயது வரம்புக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலானது ஆகும். இந்த இடைவெளியை குறைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம் ஆகும். குஜராத், ஹரியாணா, பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் வயது வரம்பு 45 ஆகவும், ஆந்திராவில் 47 ஆகவும், தெலங்கானாவில் 49 ஆகவும், கேரளத்தில் சில பணிகளுக்கு 53 ஆகவும் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது தமழகத்தில் மட்டும் வயது வரம்பை உயர்த்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது அநீதி.

சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது. அது முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். மாறாக, வயது வரம்பை கடைபிடிப்பதில் உறுதியைக் காட்டி, தேர்வர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கக் கூடாது. இதை உணர்ந்து தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.