வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச் சென்றது. ஆனால் விமானத்தின் ரேடார் சிக்னல் குளறுபடியால் விமானம் இலக்கை நோக்கி செல்லாமல் வாஷிங்டன்னை நோக்கி பறந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் விமானம் வர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் நான்கு பேர் பயணித்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், செப்டம்பர் 11 நிகழ்வை இந்த சம்பவம் ஞாபகப்படுத்தியதாகவும் அவை தெரிவித்துள்ளன. விமான விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செப்டம்பர் 11…அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் செயல்பட்டது. அங்கிருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அந்த நாட்டில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. கடந்த 2011 மே 2-ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.