தருமபுரி: தருமபுரியில் எம்.பி நிதியில் ஆட்சியர் அலுவலகம் அருகில் கப்பட்ட சோலார் சக்தி மூலம் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பயணியர் நிழற்கூடத்தை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூன் 5) மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.58 லட்சம் ஒதுக்கப்பட்டு உலக அளவில் முதல் முறையாக சோலார் சக்தி மூலம், முழுவதும் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பயணியர் நிழல் கூடம் அமைக்கப்பட்டது. இந்தப் பயணியர் நிழற்கூட திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பங்கேற்று பயணியர் நிழற்கூடத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்தப் பயணியர் நிழற்கூட வளாகத்தில் தரைத் தளத்தில் ஒரு பகுதி குளிரூட்டப்பட்ட அறையாகவும், மற்றொரு பகுதி மின்விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்ட பயணிகள் அமரும் கூடமாகவும் உள்ளது.

மேலும், இதே வளாகத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, ஐஸ்கிரீம் விற்பனை மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த நிழற்கூடத்தில் அகில இந்திய வானொலியின் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பிரத்தியேக ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர முதல் தளத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தொலைக்காட்சி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் படித்து பயன்பெறும் வகையில் சிறிய நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆன்மீக தலங்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்களும் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிழற்கூடம் குறித்து தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கூறும்போது, “முன்மாதிரியாக இந்த நிழற்கூடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதே போன்ற நிழற்கூடங்கள் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.