புதுடெல்லி: இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் மூன்றாவது நபராக ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி இளமாறன் கரீமின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பெற்றொருடன் ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு திருத்தம் செய்ய மத்திய அரசை அணுகலாமா என்று கேரள அரசு ஆலோசித்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களை தானாக கண்டறியும் வகையில், மாநிலம் முழுவதும் 726 கேமராக்கள் பொருத்தப்பட்டு, ‘பாதுகாப்பான கேரளா’ என்ற மாநில அரசின் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, இந்தக் கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, கேரள எம்.பி இளமாறன் கரீம் கடிதம் எழுதியிருந்தார். அதில், “நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இரு சக்கர வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். கார் வாங்குவது அனைவருக்கு சாத்தியமற்றது. எனவே இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்லும் வகையில் சட்ட திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்ல முடியாது. உலகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் இரண்டு பேர் பயணிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை அதில் ஏற்றிச் செல்ல அனுமதிப்பது புத்திசாலித்தனமாக இருக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.