எதிர்கால மோதல்களின் முன்னோட்டத்தை இந்தியா காண்கிறது, அதன் எதிரிகள் தங்கள் நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர்வார்கள் என்றுராணுவத் தளபதி எம்.எம். நரவானே கூறினார். நேரடிப் போர் மட்டுமின்றி மறைமுகப் போரையும் நாம் எதிர்கொள்வதற்கான திறன்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆன்லைன் கருத்தரங்கம் ஒன்றில் இது தொடர்பாக அவர் பேசியதாவது: தனித்துவமான, கணிசமான மற்றும் பல்வகை பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொள்கிறது. ஆயத்த மற்றும் திறமையான படைகளின் தேவையை வடக்கு எல்லைகளில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நமக்கு போதுமான அளவு கோடிட்டுக் காட்டுகின்றன.

அணு ஆயுதத் திறன் கொண்ட அண்டை நாடுகளுடனான (சீனா, பாகிஸ்தான்) சர்ச்சைக்குரிய எல்லைகள் மற்றும் அந்த நாடுகளின் மறைமுகப் போர் ஆகியவை பாதுகாப்பு கருவிகள் மற்றும் வளங்களின் தேவையை விரிவுபடுத்துகின்றன.

எதிர்கால மோதல்களின் முன்னோட்டத்தை நாம் காண்கிறோம். தகவல் போர்க்களம், நெட்வொர்க்குள் மற்றும் சைபர்வெளியில் இவை தினமும் இயற்றப்படுகின்றன. தீர்க்கப்படாத மற்றும் சுறுசுறுப்பான எல்லை நெடுகிலும் அவை செயல்படுத்தப்படுகின்றன.

இந்த முன்னோட்டங்கள் அடிப்படையில் நாளைய போர்க்கள காட்சியை நாம் உணரலாம். சுற்றிலும் நடப்பதைப் பார்த்தால் இன்றைய யதார்த்தத்தை நீங்கள் உணரலாம். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நவீன தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய தயார்நிலை மற்றும் திறமையான படைகளின் தேவை அவசியமாகிறது.

நமது எதிரிகள் தங்கள் நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளை தொடர்வார்கள். அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார களங்களில் மறைமுக மோதலை தொடர்வார்கள். கூட்டு முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். நேரடிப் போர் மட்டுமின்றி மறைமுகப் போரையும் நாம் எதிர்கொள்வதற்கான திறன்களை அதிகரிக்க வேண்டும்.

ராணுவம் தனது படைகளை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. மாற்றங்களுக்கு ஏற்ப எங்கள் செயல்பாட்டு அனுபவங்களை நாங்கள் மேலும் ஒருங்கிணைத்து வருகிறோம். இவ்வாறு எம்.எம்.நரவானே பேசினார்.