ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காகவே சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் காகிதப் பூ நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேசிய அளவிலும், தமிழகத்திலும் சமூக நீதிக்கு இப்போது எந்தபாதிப்பும் வரவில்லை. தமிழகத்தை பொருத்தவரை, சமூக நீதிக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் அதற்கு மூலகாரணம் திமுகவாகத்தான் இருக்கும். 1996 முதல் 2013 வரை சுமார் 17 ஆண்டுகள் மத்திய ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த திமுக, சமூக நீதிக்காக எதையும் செய்யவில்லை.

பிசி, எம்பிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 18-ல் இருந்து 50 சதவீதமாக எம்ஜிஆர்தான் உயர்த்தினார். 50 சதவீத இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்தி, அதற்கு சட்டப் பாதுகாப்பை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால், சமூக நீதிக்காக ஒரு துரும்பையும் திமுககிள்ளிப் போடவில்லை.

நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ஆகவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஸ்டாலினும் அதே எண்ணத்தில் சமூக நீதி கூட்டமைப்பு என்று கடிதம் எழுதி இருப்பதை உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

யாரும் பதில் அனுப்பவில்லை

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு இதுவரை எந்த மாநில முதல்வரும் பதில் கடிதம் அனுப்பவில்லை. தன்னுடைய 9 மாத கால ஆட்சியின் தோல்வியை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப் பூ நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ஸ்டாலின் எதையாவது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.