சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி வாக்களித்துள்ளார். ஐ.நா.வின் தலைமை நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) நேற்று உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணை நடந்தது.இதில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவைக் கண்டித்து வாக்களித்தார்.

விசாரணையின் போது, ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது படையெடுத்துள்ளதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முன்னவர் நீதிபதி ஜோன் டோனோக் கூறுகையில், “ரஷ்ய கூட்டமைப்பு படைகளைப் பயன்பருத்தி மிக மோசமான சர்வதேச சட்ட விதிமுறை மீறல்களை நிகழ்த்தி வருவது குறித்து இந்த நீதிமன்றம் மிகுந்த கவலை கொள்கிறது. ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது படையெடுத்துள்ளதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்திய நீதிபதி வாக்களிப்பு.. இந்த விசாரணையின்போது இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி ரஷ்யாவின் செயல்களைக் கண்டித்து வாக்களித்தார். சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக பண்டாரி இந்திய அரசின் உதவியுடனேயே அமர்த்தப்பட்டார் என்றாலும் கூட அவருடைய இந்த வாக்களிப்பு தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படுகிறது.

இந்தியா இதற்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டங்களில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்தது. உக்ரைன், ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றே இன்றளவும் தெரிவித்து வருகிறது. எனவே ராஜாங்க ரீதியான கொள்கை வேறு சர்வதேச நீதிமன்ற இந்திய நீதிபதியின் தனிப்பட்ட கருத்து வேறு என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா எதிர்ப்பு: இந்நிலையில் தாங்கள் தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 7, 8 தேதிகளில் நடந்த விசாரணையை எழுத்துபூர்வ பதிலின் மூலம் ரஷ்யா புறக்கணித்தது நினைவுகூரத்தக்கது. அப்போது, ரஷ்ய தரப்பில் உக்ரைன் எங்கள் மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளச் சொல்வது செல்லுபடியாகாது. அது 1948 இனஅழிப்பு உடன்படிக்கையை மேற்கோள் காட்டி உக்ரைன் முறையிட்டுள்ளது. ரஷ்யா தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்துகிறது. இன அழிப்பில் ஈடுபடவில்லை என்று தெரிவித்திருந்தது.

ஆதரவாக வாக்களித்தவர்கள் யார்? ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் 15 நாடுகளின் நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் அமெரிக்கா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், மொராக்கோ, சோமாலியா, உகாண்டா, இந்தியா, ஜமைக்கா, லெபனான், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய 13 நாடுகளின் நீதிபதிகள் வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ரஷ்யா மற்றும் சீன நீதிபதிகள் உக்ரைனுக்கு எதிராக வாக்களித்தனர்.