சென்னை செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(59), நேற்று முன்தினம் காலை செம்பரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர் ராஜேஸ்வரியை அணுகி, ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு, அவரை தனியாக அழைத்து சென்றுள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள் என்றும், தங்க நகைகளை கழற்றி பையில் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய ராஜேஸ்வரி தங்க நகைகளைக் கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கி ராஜேஸ்வரியின் பைக்குள் வைப்பதுபோல ஏமாற்றி, அவரது கவனத்தை திசை திருப்பி 12 பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, தனது பையில் நகைகள் இல்லை என்பதை அறிந்த ராஜேஸ்வரி, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:
முகக்கவசம் அணியாமல் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்போதும், அபராதம் விதிக்கும்போதும், மக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி, கைப்பைக்குள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று போலீஸார் யாரும் கூறுவது இல்லை.
மேலும், குறிப்பிட்ட இடத்தில் கலவரம் நடைபெறுகிறது, எனவே அணிந்திருக்கும் நகைகளை பத்திரமாக பையில் வைக்குமாறு கூறுவது, ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகளை கீழே போட்டு, கவனத்தை திசை திருப்புவது போன்ற வழிகளிலும் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிப் பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே காவலன் செயலி அல்லது 100, 112 என்ற அவசர அழைப்பு எண் மூலமாக காவல் துறையை தொடர்புகொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.