கோவையில் நாளை (ஜன.21) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, நடப்பாண்டும் செட்டிபாளையம் எல் அன் டி பைபாஸ் சாலை அருகே, 64 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எம்.பி.க்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் மருதமலை சேனாதிபதி, செயலாளர் டாக்டர் மகேந்திரன், பொருளாளர் டி.ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதுவரை போட்டியில் கலந்து கொள்ள 950-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களான தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் இருந்து 200 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு வருபவர்களின் பாதுகாப்புக்காக, இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காளைகளை வரிசையாக நிறுத்த மைதானம் அருகில் உள்ள தென்னந்தோப்பில் இருந்தும் தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்தவும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், 2-வது பரிசாக புல்லட்டும், 3-வது பரிசாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட உள்ளன. கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தலா 2 கிராமில் தங்க நாணயமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.