கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தான் கட்டிய வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சூட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரியைச் சேர்ந்தவர் ஹாலேஸ் (56). பாஜக தொண்டரான இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்நிலையில் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டுக்கு குடும்பத்தினர் சத்ரபதி சிவாஜியின் பெயரை சூட்ட விரும்பினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹாலேஸ், ‘நரேந்திர மோடி நிலையம்’ என பெயர் சூட்டியுள்ளார். மேலும் முகப்பு கல்வெட்டில் மோடியின் முகத்தை பொறித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் திறப்பு விழா வரும் 3-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது. சென்னகிரி பாஜக எம்எல்ஏ மாடல் விருப்பாக்ஷப்பா திறந்து வைக்க உள்ளார். இந்த வீட்டின் திறப்பு விழா அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு ஹாலேஸ் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே மோடி நிலையத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.