கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் அவசர மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அதன் மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மேகேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சியினர், மேகேதாட்டுவில் தொடங்கி பெங்களூரு நோக்கி கடந்த 2 நாட்களாக பாதயாத்திரையை நடத்தி வருகின்றனர்.

கரோனா பேரிடர் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார், இந்த யாத்திரையை நடத்தி வருகிறார். இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த தயங்குகின்றன. தமிழக அரசு இதை தட்டிக்கேட்பதற்கு முன்வர வேண்டும். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஜன.18-ம் தேதி திருவாரூரிலிருந்து புறப்பட்டு, 19-ம் தேதி மேகேதாட்டு பகுதியை முற்றுகையிட உள்ளோம்.

எங்கள் போராட்டத்துக்கு அரசு, உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.