கருணாநிதி குடும்பம் 3 தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது என்று வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக சார்பில் வேலூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: “நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன் காங்கிரஸ் தலைமையில் திமுக அங்கம் வகித்த கூட்டணி 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. அப்போது, அவர்கள் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் செய்தார்கள். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது.

நமது நாட்டின் பெருமையை நரேந்திர மோடி அரசு உலக அளவில் உயர்த்தி இருக்கிறது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் சின்னமான செங்கோல் நமது புதிய நாடாளுமன்றத்தில் நிறுவி சாதனை படைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் நரேந்திர மோடி. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் ஆசீர்வாதத்துடன் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிககள் கூட்டத்தை மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய விதத்தைப் பார்த்தபோது, 25க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையில் தமிழர்கள் அமைச்சர்களாக இடம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

 

நாட்டின் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கு தொடர்ந்து சிறப்பு சேர்த்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும், தமிழ் மொழியின் சிறப்பை, அதன் இலக்கிய வளத்தை அவர் பேசாமல் இருந்தது இல்லை. நமது நாட்டில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம், சவுராஷ்ட்ரா சங்கமம் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் பெருமையையும், தமிழக மக்களுக்கு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியோடும், குஜராத்தின் சவுராஷ்ட்ராவோடும் இருக்கும் உறவை உரக்கக் கூறியவர் பிரதமர் மோடி. நாட்டின் 23க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை, காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் வெளியிட்டு நாட்டின் பிற மாநில மக்களும் அந்த தொன்மையான நூலை படிக்க ஊக்குவித்தவர் பிரதமர் மோடி. சமீபத்தில் பபுவா நியூ கினியா நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கும் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உள்ள கட்சியாக திமுக தன்னைக் கூறிக்கொள்கிறது. மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தபோது, சிஆர்பிஎப், நீட், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழ் மொழியில் மாணவர்கள் எழுத அக்கட்சி நடவடிக்கை எடுத்ததா? நரேந்திர மோடி அரசுதான், சிஆர்பிஎப், நீட், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழ் மொழியில் மாணவர்கள் எழுத நடவடிக்கை எடுத்துள்ளது. சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தர முடிவு செய்தபோது, அவரை தமிழகத்தின் மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்தவர் நரேந்திர மோடி. தமிழகத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு இதைவிட சிறப்பாக வேறு என்ன செய்ய முடியும்?

கடந்த 9 ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சி தமிழகத்திற்கு என்ன செய்தது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவருக்கு நான் பதில் அளிக்கிறேன். அவர் நன்றாக கேட்டுக்கொள்ளட்டும். தைரியம் இருந்தால் நாளை இதற்கு அவர் பதில் சொல்லட்டும்.

மத்தியில் திமுக அங்கம் வகித்த யுபிஏ கூட்டணி 2004 முதல் 2014 வரை 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது, அது தமிழகத்திற்குக் கொடுத்த தொகை ரூ.95 ஆயிரம் கோடி. ஆனால், நரேந்திர மோடி அரசு 9 ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கொடுத்த தொகை ரூ.2.47 லட்சம் கோடி. யுபிஏ கூட்டணி அரசு தமிழகத்திற்குக் கொடுத்த மானியத் தொகை ரூ.58 ஆயிரம் கோடி. நரேந்திர மோடி அரசு கொடுத்த மானியத் தொகை ரூ. 2.31 லட்சம் கோடி.

நரேந்திர மோடி ஆட்சியில் உள்கட்டமைப்புப் பணிகள் மிகுந்த வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் 2,352 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. மேலும், 3,710 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசு செலவிடும் மொத்த தொகை ரூ. 58 ஆயிரம் கோடி. 105 கி.மீ நீளத்திற்கு கிழக்குக் கடற்கரைச் சாலைப் பணிக்காக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. சென்னை-பெங்களூரு விரைவுப் பாதை அமைக்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது.

சென்னையில் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக மத்திய அரசு கொடுத்த தொகை ரூ.72 ஆயிரம் கோடி. சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒதுக்கி இருக்கும் நிதி ரூ.3,500 கோடி. இவை மட்டுமின்றி, சென்னை-மைசூர், சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையில் புதிய துறைமுகப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.1,260 கோடி. நெய்வேலி என்எல்சி விரிவாக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.ஆயிரம் கோடி.

மத்திய அரசு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை 56 லட்சம். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 84 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மருத்துவ ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள தமிழக மக்களின் எண்ணிக்கை 2.50 கோடி. தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்காக மோடி அரசு கட்டிக் கொடுத்துள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கை 62 லட்சம். இவை மட்டுமின்றி, ஒரு கோடி ஏழை மக்கள் பயன்பபெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் அவர்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் செம்மொழி ஆராய்ச்சிக்கான அலுவலகம் மத்திய அரசின் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் ஏன் திறக்கப்படவில்லை என்று திமுக கேள்வி எழுப்புகிறது. மத்தியில் 18 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற திமுக, தமிழகத்திற்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வர வேண்டும் என்று ஏன் முயலவில்லை? ஆனால், மதுரையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. கோவையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ரூ.1,500 கோடி மதிப்பில் உருவாகி வருகிறது. 11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்து, அந்த கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் படிக்கத் தொடங்கிவிட்டார்கள். சென்னையில் ரூ.1,260 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கி இருப்பது மோடி அரசு. டிபன்ஸ் காரிடார் எனும் பாதுகாப்புச் சாளரம் நாட்டில் 2 இடங்களில் அமைக்க முடிவு செய்தபோது, அதில் ஒன்றை தமிழகத்திற்குக் கொடுத்து தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்திருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஊழல் மட்டுமே செய்யக்கூடிய கட்சிகள். 2ஜி, 3ஜி, 4ஜி என இவர்களின் ஊழல் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாறன் குடும்பம் 2 தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது; கருணாநிதி குடும்பம் 3 தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது; சோனியா காந்தி குடும்பம் 4 தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறது. ஊழல்வாதிகளை தமிழ்நாட்டில் இருந்து தூக்கி எரிந்துவிட்டு ஊழலற்ற தமிழரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் நேரம் வந்துவிட்டது.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிகள் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டம் 370ஐ ரத்து செய்ய அச்சப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், அந்த சட்டப் பிரிவை துணிச்சலுடன் ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு முழுமையாக இணைத்தவர் நரேந்திர மோடி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக நரேந்திர மோடி பிரதராக உள்ளார். அப்போது என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்களாவது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலின் கீழ் அமர்ந்து பணியாற்ற வேண்டும்.” இவ்வாறு அமித் ஷா உரையாற்றினார்.