விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் கிடா முட்டு போட்டி நீதிமன்ற அனுமதியுடன் இன்று விமரிசையாக நடைபெற்றது.

வீரசோழனில் இந்திய தேசிய லீக் மற்றும் தெற்குவாசல் கிடாய் முட்டு நண்பர்கள் குழு சார்பாக கிடாய் முட்டு போட்டி கடந்த மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. போட்டி நடைபெறும் நாளன்று போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிடாய்கள் வீரசோழன் கொண்டுவரப்பட்டன. கிடாய் முட்டு போட்டி நடைபெற இருந்த நிலையில் கிடாய் முட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதியில்லை என போலீஸ் அனுமதி மறுத்தது. இதனால் போட்டி தடைபட்டது.

அதையடுத்து, கிடாய் முட்டு போட்டி நடத்துபவர்கள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்றனர். இந்திய தேசிய லீக் கட்சி மற்றும் மதுரை தெற்குவாசல் கிடாய் முட்டு நண்பர்கள் குழுவினர் சார்பில் இன்று காலை கிடா முட்டு போட்டி வெகு விமர்சையாக தொடங்கியது. இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பசீர் அகமது கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

மதுரை, சிவகாசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன. கிடாய் முட்டு போட்டியில் பங்கேற்ற கிடாய்களை அரசு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். மேலும், போட்டியில் பங்கேற்க களத்திற்கு வந்த கிடாய் ஜோடிகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.

இப்போட்டியில் 30 முறை முட்டிய கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட செயலாளர் ஜஹாங்கீர், பொருளாளர் குத்தூஸ்ராஜா, வீரசோழன் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சாதிக் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.