தேசியக் கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லவைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி அரசுப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ‘‘ஒரு பெண் குழந்தையை படிக்க வைத்துவிட்டால் அந்த குடும்பமே படித்துவிடும். அந்தவகையில் தமிழகத்தில் 70 சதவீத பெண்கள் எழுத்தறிவுடன் நடைபோடுவதற்கு பெரியார் செய்த சமூகப் பணிகள் முக்கிய காரணமாகும். எனினும், கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைக்க பெற்றோருக்கு இன்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆசிரியர்கள் கண்டிப்பது தங்களின் நலனுக்காக என்பதை மாணவர்கள் உணர வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்வில் திமுக எம்எல்ஏ ஜெ.கருணாநிதி, சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மார்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் அமைச்சர் அன்பில் மகேஸ் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது: பாலியல் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் தர முன்வரவேண்டும். அதேநேரம், குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நல்ல ஆசிரியர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

அதேபோல் பள்ளிகளில் பார்வைக் குறைபாடு போன்ற உடல்ரீதியான பிரச்னைகளை கையாள்வதற்குதான் தற்போது மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து உளவியல் ஆலோசனை வழங்கவும் ஆலோசித்து வருகிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மோதலை கையாள்வதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ள கால அட்டவணைப்படி திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இந்தாண்டு பொதுத் தேர்வும் கட்டாயம் நடைபெறும். அதற்கான தேர்வுக் கால அட்டவணை பாடத்திட்டம் மற்றும் புறச்சூழல் குறித்து முடிவு செய்து வெளியிடப்படும். எனவே, மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். எனினும், ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் அதிக கவனத்துடன் இருப்போம். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க ஆசிரியர்களைக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ள கால அட்டவணைப்படி திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும். இந்தாண்டு பொதுத் தேர்வும் கட்டாயம் நடைபெறும்.