குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு தற்போது ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களையும் தடமறியும் முயற்சியும் நடைபெற்று வந்தது.
இதில் ஜாம் நகரில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு தற்போது ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநிலம் கரடி நகராட்சி ஆணையர் விஜய்குமார் கூறியதாவது:
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட 2 பேர், கோவிட் பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் அவர்கள் இருவருக்கும் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. 3 பேருக்கும் அறிகுறியற்ற நிலையில் கரோனா பாதிப்புள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.