விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின்இணைப்புகள் வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
விவசாயிகளுக்கான ஒரு லட்சம்மின்இணைப்புகள் அடுத்த ஆண்டுமார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும். இருப்பினும் அடுத்த 4 மாதங்களுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்.
பதிவு மூப்பு அடிப்படையில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்துள்ள விவசாயிகள் நிலம், கிணறு உரிமைக்கான ஆவண நகல்களை பிரிவு அலுவலரிடம் காண்பித்து 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில், மின்வாரியம் மதிப்பீடு தயார் செய்து மின்இணைப்பு வேலைகளை முடித்து மின்இணைப்பு பெற்றுக் கொள்ள விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். மின்கட்டணத்தை தமிழக அரசு, மின்வாரியத்துக்கு மானியமாக வழங்கும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.