திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அதிமுக முன்னாள் நிர்வாகி நந்தன்(65). இவர் அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருப்பதாக வதந்தி செய்தி பரப்பியதாக கூறி, நந்தன் மீது திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான நந்தனின் மகன் குப்புசாமி(36), கடந்த 11-ம் தேதி தீக்குளித்து இறந்தார்.

இந்நிலையில், நேற்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட குப்புசாமி வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மகளை காதலித்த சதீஷை திருவள்ளூர் மாவட்ட போலீஸார் சட்டவிரோதமாக 60 நாட்களாக அடைத்து வைத்து, அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்தணியில் நந்தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.