சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். அருண்ராஜா காமாராஜா பாடலை எழுதியிருந்தார்.ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி? – அனிருத் பாடியுள்ள பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். முழுக்க முழுக்க ‘மாஸ்’ஆக உருவாகியுள்ள பாடலின் வரிகள் ஈர்க்கிறது. ‘நிலவரம் புரியுதா உட்காருடா..தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..’, ‘எளியவன் மனசுல ஃபிட்டானவன்’, ‘நீ எண்டு கார்டு வைச்ச இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்’ போன்ற வரிகள் ரசிகர்களுக்கான விருந்து. பாடலின் நடுவில் ரஜினியின் மாஸ் நடையும், ஸ்டைலும் தெறிக்கிறது. பாடலின் தொடக்கத்தில் வரும் டையலாக்கும் அதன் பின்னான பாடல் வரிகளும், அதன் ஸ்பீடும் ஒரு ‘பக்கா ஆக்‌ஷன்’ படத்துக்கான விருந்து ரெடி என்பதை உணர்த்துகிறது.