இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி கடந்த 2019ம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நுழைவு வரியுடன் சேர்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தமிழக அரசு, ஹாரிஸ் ஜெயராஜுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம், “காருக்கான நுழைவு வரியை ஏற்கெனவே செலுத்தப்பட்டுவிட்டது. மேலும், நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தனக்கு மட்டும் அபராதத்துடன் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது” என வாதிட்டார்.